Monday, March 29, 2010

558.சென்னை அணியின் 4வது தொடர் தோல்வி -CSK vs RR

சென்னை தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்ததால், ராஜஸ்தானுடன் ஆன போட்டியில் சூடு பறக்கும் என்று எண்ணினேன்! ஆனால், தோல்விக்கு அஞ்சுபவர்கள் தாங்கள் இல்லை என்று சென்னை அணி கேவலமாக விளையாடி தோற்றது!
முதலில் ராஜஸ்தான் அணி பேட் செய்தது, முதலில் நிதானமாக ஆடிய ஓஜா, பிறகு எல்லா போலர்களையும் ஒரு வாங்கு வாங்கியதில், 11 ஓவர்களில் ஸ்கோர் 100-1. யூசுப் பதான் இன்னும் களமிறங்காத நிலையில், ராஜஸ்தான் 200 தொடுவார்கள் என்று தான் எண்ணினேன். சிறப்பாக பந்து வீசிய ஜகதியின் பந்தில், பதான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஓஜா, 49 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தது ஹைலைட், அது போல, நன்றாக பந்து வீசக்கூடிய மார்க்கல், 4 ஓவர்களில் 46 ரன்கள் வாரி வழங்கியது ஒரு கரும்புள்ளி. இருந்தாலும், 177 ரன்கள் என்பது தோனி, ரெய்னா, ஹெய்டன் உள்ள சென்னைக்கு கடின இலக்காகத் தோன்றவில்லை!

ஹெய்டன் சீக்கிரமே அவுட் ஆனாலும், விஜய் நன்றாகவே ஆடினார். நர்வாலின் ஒரு ஓவரில் விஜய் 26 ரன்கள் குவித்தது ஹைலைட். 75-2 (8.4) என்ற நிலையில், இல்லாத ரன்னுக்கு ஸ்டார்ட் கொடுத்து, கிரிஸூக்குத் திரும்ப முடியாமல், விஜய் அனாவசிய ரன்-அவுட்! விஜய்யைப் போலவே, மூளையை அடகு வைத்து, ரெய்னா வார்ன் பந்தில் Clean Bowled! 79-3 (9.4). தோனி இருந்ததால் நம்பிக்கை இருந்தது, ரன்ரேட் 9.7 ஆக இருந்தாலும்!

ஒரு கட்டத்தில், ரன்ரேட் 12க்கு மேலே சென்றது, இருந்தும் நம்பிக்கை இருந்தது தோனி மேல்! தமிழ்நாட்டுச்சிங்கம், domestic ஆட்டப்புலி பத்ரி, ரன் எடுக்கையில் தோனி மீது மோதி, அவர் மட்டையையும் தட்டி விட்டதில், தோனி ரன்அவுட். சென்னைக்கு ஆப்பு உறுதியானது!
மார்க்கல், வார்ன் ஓவரில் (18வது) 3 சிக்ஸர்கள் அடித்து ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தினார். ஆனாலும், அடுத்த ஓவர் வீசப்போவது வேகப்பந்து வீச்சாளர் டைட் என்பதால், வெல்வது கடினம் என்று புரிந்தது! டைட் மார்க்கலை அவுட்டாக்கினார், 160-ல் சென்னை சுருண்டது! டைட் பந்து வீச்சு அபாரம்: 4-0-22-2. திரிவேதியும் தனது 4 ஓவர்களில் 16 ரன்களே கொடுத்தார்!

தோனி பத்ரிக்கு முன்னால், மார்க்கலை பேட் செய்ய அனுப்பியிருக்க வேண்டும். தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகள் விழும்போது தான், இன்னிங்சை சீர்படுத்த பத்ரியை அனுப்புவது பயன் தரும்! அடுத்த ஆட்டத்தில் மார்க்கலை சற்று முன்னால் ஆட அனுப்பினால் நல்லது என்று தோன்றுகிறது!

"லோக்கல்" வீரர்கள் தொடர்ந்து சொதப்புவது தான், சென்னை அணியின் தோல்விகளுக்கு முக்கியக் காரணம். இத்தோல்விக்கு (நன்றாக ஆடிக் கொண்டிருந்தபோது!) தன்னைத்தானே ரன்அவுட் செய்து கொண்ட விஜய்யும், தோனியை ரன்அவுட் செய்த பத்ரியும் அதிமுக்கியக் காரணங்கள்! Batsmen who get good starts should carry on to win the game! இப்படி நான் சொன்னது, டிவிட்டரில் உலவும் தமிழ்ப்பாசம் மிக்க, "வருத்தப்படாத" வாலிபர் ஒருவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தினால் நான் என்ன செய்ய ;-)

அடுத்து நடந்த MI vs DC ஆட்டத்தில், 16 பந்துகளில் 49 ரன்கள் விளாசிய ஹர்பஜனிடமிருந்து சென்னை அணியின் லோக்கல் மட்டையாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது! திறமை மட்டுமே போதாது, மனஉறுதியும், தன்னம்பிக்கையும் வெற்றிக்கு மிக அவசியமான குணங்கள்.

ஒரு பந்துவீச்சாளரோ/ மட்டையாளரோ ஆட்டத்தின் போக்கை மாற்றி தன் அணியின் வெற்றிக்கு தனிக்காரணமாக விளங்க T-20-இல் (டெஸ்ட், ஒரு நாள் ஆட்டங்களைக் காட்டிலும்) சாத்தியங்கள் அதிகம்! எல்லாரும் சிறப்பாக ஆடும்போது, தானும் கலக்குவது பெரிய விஷயமில்லை என்பதை சென்னை "லோக்கல்" வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Even if one fails in couple of matches, when he rises to the occasion when the chips are down and ensures victory in the 3rd match, his failures can be ignored! But, unfortunately that is not the case with the CSK's Local players :-(

எ.அ.பாலா

Saturday, March 27, 2010

557.மற்றுமொரு தோல்வி -CSK vs MI -IPL

இந்த மேட்சை பார்க்க ஆபிசிலிருந்து சீக்கிரம் வந்து விட்டேன்! தோனி சச்சினுடன் டாஸுக்கு வந்தது வயிற்றில் பாலை வார்த்தது. சச்சின் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார். நாம் டாஸில் ஜெயித்திருந்தாலும், பேட் செய்திருப்போம் என்பது என் அனுமானம்.

ஜாகீரை ஒரு ஓவரில், மங்கூஸ் துணையின்றி, 4 பவுண்டரிகள் அடித்த ஹெய்டன் ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்கவில்லை, ஹர்பஜன் பந்து வீச்சில் அவுட்! பார்த்திவ்வும் (இவரை யாரோ குட்டி ஹெய்டன் என்றதற்கு எதால் சிரிப்பது என்று தெரியவில்லை!) சீக்கிரமே ஆட்டமிழந்தார். தோனி அணிக்குத் திரும்பியதால், confidence personified ஆக ரெய்னா பயமின்றி விளையாடியது, நல்ல பலனைத் தந்தது. முதலில் நிதானமாக ஆடிய பத்ரியும், ரெய்னாவும் ரன்களை குவிக்க ஆரம்பித்தனர், மும்பை தரப்பில் மெக்லாரனும், ஹர்பஜனும் சிறப்பாக பந்து வீசியபோதும்!

இருவரும் 15 ஓவர்கள் ஜோடி சேர்ந்து ஆடியதில், ஸ்கோரை 38லிருந்து 180க்கு எடுத்துச் சென்றனர். அதாவது, 15 ஓவர்களில் 142 ரன்கள் (9.47 பிரதி ஓவருக்கு). இன்னும் ஒரு 10 ரன்கள் எடுத்திருக்கலாம் தான் என்றாலும், 180 என்பது defend செய்யத் தக்கதே என்பது என் கருத்து!

இப்படிச் சொல்லக் காரணங்கள் உள்ளன!

1. முரளியும், மார்க்கலும் நல்ல பந்து வீச்சாளர்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம், அஷ்வினுக்கு பதிலாக வந்த ஜகதியும் மோசமான பந்து வீச்சாளர் இல்லை! பாலாஜியும், ஜோகீந்தரும் ஓரளவு ஈடு கொடுத்தால், மும்பையை கலங்கடிக்க முடியும்!

2. மும்பை அணியில் சச்சினைத் தவிர மற்றவர் ஆவரேஜ் பேட்ஸ்மேன்கள் தான். ப்ரேவோ, போலார்ட் இருவரும் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளத் தடுமாறுபவர்கள்! தவான், திவாரி, சதீஷ் எல்லாம் நேற்றைய மழையின் காளான்கள் வகை, பிரஷரை எதிர்கொள்ளும் திறன் அற்றவர்கள்!

தோனியின் பந்துக் காப்பமைப்பும் (Field placement) பந்து வீச்சு மாற்றங்களும் நேற்று சோபிக்கவில்லை! இடையில் 3 மேட்ச்கள் ஆடாதது காரணமாக இருக்கலாம். பாலாஜி, ஜோகீந்தர் புண்ணியத்தில், தவான் செட்டில் ஆகி நம்மை ஒரு வாங்கு வாங்கினார். சச்சின் விளாசலை ஏற்றுக் கொள்ளலாம். தவானையெல்லாம் வளர்த்து விடுவது கொடுமையின் உச்சம்! இருந்தும், 92 for no loss (8.5 ஓவர்கள்) நிலையிலிருந்து மும்பை 120-3 (13.2) என்ற நிலைக்கு வந்ததற்கு முரளியும், ஜகதியும் தான் காரணம். சென்னைக்கு கொஞ்சம் தெம்பு வந்தது!

கடைசி 5 ஓவர்களில், 48 ரன்கள் (RR 9.6) தேவை என்ற நிலையில், Match was interestingly poised. அப்போது தான் தோனி ஒரு பெரும் தவறிழைத்தார்! தனது முதல் மேட்ச் ஆடும் பெரேராவை 16வது ஓவரை வீச அழைத்தார். ஒரு பந்தைக் கூட பிட்ச் பண்ணத் துப்பில்லாத அந்த அறிவிலி, அந்த ஓவரில் 19 ரன்கள் (4 பவுண்டரிகள்) வாரி வழங்கினார்!!! அதன் பின், போலார்டும், சச்சினும் விக்கெட்டிழந்தும் பயனொன்றுமில்லை. சென்னை அணியின் மூன்றாவது தொடர் தோல்வி இது!

KXIPக்கு எதிரான மேட்ச்சில் 2 பந்துகளில் 1 ரன் அடிக்கத் துப்பில்லாத அஷ்வின் அத்தோல்விக்கு முக்கியக் காரணமானார். மும்பைக்கு எதிரான தோல்விக்கு (மேட்ச் மும்பை பக்கம் திரும்பியதற்கு!) பெரேராவின் பந்து வீச்சே காரணம்! டிவிட்டர் நண்பர் ஒருவர் (http://twitter.com/mu75) கூறியதைச் சுட்டுவது பொருத்தமாக இருக்கும்:
It is written. How Sinhalese can win a match for Chennai? :-(

நமது பந்து வீச்சு, முரளி, மார்க்கல் தவிர்த்து, படு சுமாராய் காட்சியளிப்பதை வைத்துப் பார்க்கையில், சென்னை அணி செமிஃபைனலுக்கு தேர்வாகும் என்று தோன்றவில்லை! நமது பேட்டிங்கை வைத்து, 136 ரன்கள் இலக்கையும் அடைய முடியவில்லை, நமது பந்துவீச்சை வைத்து, 180 ரன்கள் இலக்கையும் டிஃபண்ட் பண்ண முடியவில்லை :( என்ன இழவு பிரச்சினையோ?

எ.அ.பாலா

Monday, March 22, 2010

556. நமக்கு எதிரி நாம் தான் - சேப்பாக்கம் IPL -CSK vs KXIP

(நேற்று) ஞாயிறு காலை எழுந்தவுடன் அன்று சேப்பாக்கத்தில் நடைபெறவிருந்த (சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஆன) ஐபிஎல் டி-20 மேட்ச்சை அரங்கத்தில் பார்க்க வேண்டும் என்று ஏன் தோன்றியது என்று தெரியவில்லை. எழுந்திருந்தபோதே லேசாக இருந்த மைக்ரைன் காரணமாக இருக்கலாம்!

சென்னை ஐபிஎல் ஆட்டங்கள் எல்லாவற்றுக்கும் டிக்கெட் விற்பனை முடிந்து விட்ட நிலையில், நண்பன் ஒருவனை தொடர்பு கொண்டு கேட்டதில், ஆபத்பந்தவனாக, அனாதரட்சகனாக, "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் 2 காம்ப்ளிமெண்ட்ரி டிக்கட் கிடைச்சுது, உனக்குத் தான் ஃபோன் பண்ணலாம்னு இருந்தா, நீயே பண்ணிட்டே!!" என்று நெஞ்சில் பாலை வார்த்தான் :-) மாத்திரையை போட்டு மைக்ரைனை விரட்டி, 3-4 வருடங்களுக்குப் பின் சேப்பாக்கம் செல்லத் தயாரானேன் (நண்பனுடன்).

அரங்கம் அமைந்துள்ள பெல்ஸ் சாலையில், அரங்கத்திலிருந்து எழுந்த பேரிரைச்சலாலும், சிவமணியின் டிரம்ஸாலும், மிதமான நிலநடுக்கத்தை உணர முடிந்தது! கொடி, தொப்பி, டி-ஷர்ட், bandana, ஊதுகுழல் விற்பவர்கள், 10 ரூபாய்க்கு மூஞ்சியில் படம் வரைந்து உங்களை CSK வெறியராக மாற்றுபவர்கள், ரசிகர் கூட்டம் என்று ஜேஜே என்றிருந்த அச்சாலையில் நடக்கையில் உற்சாகம் பற்றிக் கொண்டது. அரங்கத்தில்நுழைவதற்கு முன், செலவழித்த ஒரு 30 நிமிடங்கள் இவ்விடுகைக்கு தேவையில்லாதது ;)

வாலாஜா சாலையில் இருந்த D-Stand நுழைவு வாயிலில் புகுந்து, செக்யூரிட்டி செக் முடிந்ததும், பச்சை பசேலென அரங்க (ரங்கநாதரும் பச்சை மாமலை மேனி தான்!) தரிசனம்! ஃப்ளட் லைட் ஒளி வெள்ளம் இரவை பகலென ஏமாற்றிக் காட்டியது. அரங்குக்கு வெளியே திருமங்கையாழ்வார் பாடிய திருவல்லிக்கேணி, உள்ளே அமெரிக்கா! உட்சூழல், தோற்றத்தைச் சொல்கிறேன். ஹைடெக் காபி மெஷின், குளிர்பானங்கள், அக்வாஃபினா, சியர் லீடர்ஸ், அதிரும் ராக் இசை என்று அமெரிக்கத்தனம் தெரிந்தாலும், கழிவறைப்பக்கம் சென்றவுடன் சந்தேகம் தீர்ந்து விட்டது!

(KXIP) சியர் லீடர்சுக்கு அருகில், நேர் எதிராக இருக்கையை தேர்ந்தெடுத்தேன். ஐபிஎல்-லை பொருத்தவரை கிரிக்கெட் மட்டுமே நோக்கமாக இருப்பது தகாத ஒன்று! இதை மகான் லலித் மோடியே திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார்!

டாஸ் வென்ற சென்னை அணி, பஞ்சாபை பேட்டிங் செய்ய அழைத்தது! பஞ்சாப் ஆட்டத்தில் சுவாரசியமாக ஒன்றும் இல்லை. மற்ற வீரர்கள் சொதப்பியதில், விக்கெட் ரெகுலராக விழுந்ததில், யுவராஜ் கூட ரன் ரேட்டை உயர்த்த முடியாமல் தத்தளித்தார், 2 அட்டகாசமான சிக்ஸர்களை அடித்தாலும்! பஞ்சாபின் சொதப்பல் தந்த கடுப்பை பெருமளவு குறைத்த பெருமை சிவப்பு உடையில் ஜொலித்த பஞ்சாப் சியர் லீடர்ஸையே சாரும்! சியர் லீடர்ஸ் ஆட்டம், பஞ்சாப் அணியின் ஆட்டத்தை விட எவ்வளவோ மேல்! தமிழ் குத்துப் பாட்டுகளுக்கு (அப்டி போடு போடு, நாக்கமுக்க, ஓடிப்போயி, வேர் இஸ் தி பார்ட்டி..) அவர்கள் improvise பண்ணி ஆடியது சூப்பர் :-) (ஆடிய மூன்றில், 2 பிளாண்ட், 1 புருனட் என்பது வாசகர்களுக்கு கூடுதல் தகவல்!)

சியர் லீடர்ஸே இப்படி imrpovise பண்ணி கலக்கியபோது, பஞ்சாப் சிங்கங்கள் ஒன்று கூட improvise பண்ணி அதிரடியாக ஆடாததற்குக் காரணம், தோனியில்லாத சென்னை சோனிகளுக்கு அதெல்லாம் தேவையில்லை என்று அவர்கள் நினைப்பாக இருக்கலாம் :-)

யுவராஜ் 43 (28 பந்துகள்); பஞ்சாப் 136 ரன்களில் சுருண்டது! முரளி தன் உலகத்தரத்தை நிரூபிக்கும் வகையில் அபாரமாக பந்து வீசியது தான் ஹைலைட் (4-0-16-3) ஆஹா, சென்னை மிக எளிதாக வென்று விடும் என்று தான் எண்ணினேன், பார்த்திவ் படேலும், ஹெய்டனும் 6.5 ஓவர்களில் 50 தொட்டபோது! சென்னை அணி 12.3 ஓவர்களில் 96-2 (ரெய்னா அவுட்). தேவையான ரன் ரேட், 5.47 மட்டுமே! (8 விக்கெட்கள் வைத்துக் கொண்டு டெஸ்ட் மேட்ச்சில் கூட இவ்விலக்கு சுலபமானது).

சென்னைக் கோமாளிகள் முரளி விஜயும், பத்ரிநாத்தும் மூளையை கழட்டி வைத்து விட்டு ஆடியதில், ஸ்கோர் 104-4, பா.படேலும், கோனியும் தொடர்ந்து வெளியேறியபோது, ஆட்டம் TIE ஆகப் போகிறது என்று விளையாட்டாய் நண்பனிடம் சொன்னேன், அவன் என்னை விட டென்ஷனில் நகம் கடித்துக் கொண்டிருந்தான். இறுதியாக (நாம் வெல்ல) ஒரு வாய்ப்பு (2 பந்துகள் ஒரே ஒரு ரன்!) இருந்தபோது, மற்றொரு சென்னைக் கோமாளி அஷ்வின், ஒரு பந்தில் ரன் எடுக்க முடியாமல், அடுத்த பந்தில் அவுட்டானார். பஞ்சாப் தரப்பில் ரமேஷ் போவாரும், தென்னாப்பிரிக்க வீரர் யுவான் தெரானும் சிறப்பாக பந்து வீசினர்!

அடுத்து நடந்த சூப்பர் ஓவர் அவலத்தைப் பற்றிச் சொல்ல பெரிதாக எதுவுமில்லை! சென்னை அணி மண்ணைக் கவ்வியது :-( இப்படியாக சில ஆண்டுகளுக்குப் பிறகான என் சேப்பாக்கம் விஜயம் சோகத்தில் முடிந்தது!

இறுதியாக, டிவிட்டரில் கிரிக்கெட் விமர்சக "ஐயா" ஒருவர், 50 ரன்கள் அடித்து, 121 வரை ஸ்கோரை இட்டு வந்த பா.பட்டேல் தான் சென்னைத் தோல்விக்குக் காரணம் என்று ஒரே போடாக போட்டார்! சே, இவரை மாதிரியெல்லாம் வித்தியாசமாக, புத்திசாலித்தனமாக நம்மால் யோசிக்க முடியலையே என்று ஒரே ஆதங்கமாகப் போய் விட்டது ;-)

எ.அ.பாலா

Thursday, March 04, 2010

555. கல்கியில் நண்பர் பாசிடிவ் அந்தோணியின் கட்டுரை

எனது அந்தோணிக்கு உதவி வேண்டி என்ற இடுகையின் வாயிலாக அந்தோணியுடனான நட்பு தொடங்கியது. அசாத்தியமான தன்னம்பிக்கையும், தன் உழைப்பில் சம்பாதித்து வாழ வேண்டும் என்ற திடமான எண்ணமும் மிக்கவர் என்பதை முதல் சந்திப்பிலேயே புரிந்து கொள்ள முடிந்தது. மனச் சோர்வான சில சமயங்களில், அவருடன் பேசி மனத்தெளிவடைந்திருக்கிறேன். அந்தோணி தொடர்பான என் இடுகைகள் கீழே:

http://balaji_ammu.blogspot.com/2008/08/452.html

http://balaji_ammu.blogspot.com/2008/04/431.html

சமீபத்திய கல்கி சுயமுன்னேற்றச் சிறப்பிதழில் (07.03.2010) அந்தோணியின் கட்டுரை வெளிவந்திருக்கிறது. அதை ஸ்கேன் செய்து இட்டிருக்கிறேன். கிளிக் செய்து பெரிதாக்கி வாசிக்கவும்.

இலக்குகள் பற்றி அந்தோணியைக் கேட்டால்,
"தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் இவற்றில் அடிப்படையிலான துறையில் சுயபரிசோதனைகளை சகமானுடத்துடன் பகிர வேண்டும். கேட்பவர்களுக்கெல்லாம் இல்லை என்று சொல்லாது கொடுக்கும் நிலைக்கு உயர வேண்டும்" என்கிறார்.
என்ன ஒரு உயர்வான சிந்தனை! வாழ்க!



அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails